தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக 37 வயதான பேடோங்தர்ன் ஷினவத்ராவை இன்று (ஆகஸ்ட் 18) அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளார் தாய்லாந்து மன்னர் மஹா வஜ்ஜிரலங்கோன். இதனால் தாய்லாந்தின் இள வயது பிரதமராகியுள்ளார் பேடோங்தர்ன் ஷினவத்ரா.
கடந்த வாரம் தாய்லாந்து நாட்டு பிரதமர் பதவியில் இருந்து ஸ்ரெத்தா தவிசினை அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் நீக்கியது. அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்காக சிறை தண்டனை பெற்ற ஒருவரை அமைச்சராக நியமித்ததற்காக ஸ்ரெத்தா தவிசினை குற்றவாளி என்று தீர்ப்பளித்து பதவி நீக்கம் செய்தது நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து பிரபல தொழிலதிபரும், 2001 முதல் 2006 வரை அந்நாட்டு பிரதமராக பதவி வகித்த தக்ஸின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்தர்ன் ஷினவத்ராவை புதிய பிரதமராக கடந்த ஆகஸ்ட் 16-ல் தேர்ந்தெடுத்தது தாய்லாந்து நாடாளுமன்றம்.
இதை அடுத்து பேடோங்தர்ன் ஷினவத்ராவை புதிய பிரதமராக அங்கீகரித்துள்ளார் அந்நாட்டு மன்னர் மஹா வஜ்ஜிரலங்கோன். மன்னரின் அறிவிப்பைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளார் பேடோங்தர்ன் ஷினவத்ரா.
புதிய பிரதமர் பேடோங்தர்ன் ஷினவத்ராவின் தந்தை, தக்ஸின் ஷினவத்ரா 2006-ல் ராணுவ ஆட்சியால் பதவி நீக்கப்பட்டார். மேலும் பேடோங்தர்ன் ஷினவத்ராவின் அத்தை யிங்லக் ஷினவத்ராவும் தாய்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 2011-ல் தாய்லாந்தின் முதல் பெண் பிரதமரான யிங்லக் ஷினவத்ராவை 2014-ல் பதவி நீக்கம் செய்தது அந்நாட்டு நீதிமன்றம்.