
ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷிகேரு இஷிபா, லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமராக ஷிகேரு இஷிபா கடந்த அக்டோபரில் பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஜூலை மாதம் எல்டிபி-கொமெய்டோ கூட்டணி, ஜப்பான் நாட்டு நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மையை இழந்தது. மொத்தமுள்ள 248 இடங்களில் 141 இடங்களிலிருந்து 122 இடங்களாகச் சரிவைச் சந்தித்தது.
இந்தத் தேர்தல் தோல்வி ஜப்பானில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்தே, தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ஷிகேரு இஷிபா ராஜினாமா செய்துள்ளார். ஷிகேரு இஷிபா பெரும்பாலும் எதிர்ப்பைச் சந்தித்தது, தனது சொந்தக் கட்சியிலிருந்த வலதுசாரியினரிடமிருந்து தான்.
கட்சித் தலைவர் பதவிக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்பதை அறிய திங்கள்கிழமை வாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதற்கு ஒருநாள் முன்னதாக, இஷிபா கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இஷிபா இந்த முடிவை எடுத்துள்ளதாகச் செய்திகளில் கூறப்படுகின்றன.
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகக் கருதப்படும் ஜப்பான், அமெரிக்காவிடமிருந்து வரி விதிப்பு பிரச்னை, விலை உயர்வு, பிராந்திய ரீதியிலான பதற்றங்கள் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் ஷிகேரு இஷிபா விலகியிருக்கிறார்.
தனக்கு அடுத்து தலைவர் பதவிக்கு வரவுள்ளவரைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைத் தான் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் ஷிகேரு இஷிபா தெரிவித்துள்ளார்.
Japan | Japan PM | Ishiba Shigeru | Japan PM Ishiba Shigeru | Liberal Democratic Party