
ஜப்பானின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் 516 விமானம் ஓடுதளத்திலிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து ஹனேடா சென்ற ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516, ஜப்பான் நேரப்படி மாலை 5.47-க்கு தரையிறங்கியது. இந்த விமானத்தில் 8 குழந்தைகள், 12 விமானப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 379 பயணிகள் இருந்தார்கள். சி ஓடுதளத்தில் தரையிறங்கியபோது ஹனேடா விமானப் படை தளத்தைச் சேர்ந்த எம்ஏ722 விமானத்தின் மீது மோதியது. இதில் இரு விமானங்களும் தீப்பிடித்தன.
இதையடுத்து, 70 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாகத் தீயை அணைத்தன. இதில் பயணிகள் விமானத்திலிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். 379 பயணிகளும் உயிர் தப்பினார்கள்.
கடலோரக் காவல் படை விமானத்தில் 6 பேர் இருந்துள்ளார்கள். இதில் ஒருவர் மட்டும் விமானத்திலிருந்து தப்பித்துள்ளார். மற்ற 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த விபத்தைத் தொடர்ந்து, ஹனேடா விமான நிலையத்தில் அனைத்து ஓடுதளங்களும் மூடப்பட்டன. விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தின் காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.