அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அந்நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிடும் அமெரிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது இத்தாலியில் உள்ள ஒலோலாய் கிராமம்.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப். இதை அடுத்து, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது குடியரசுக் கட்சி. இதனால் நிர்வாகரீதியிலும், கொள்கைரீதியிலும் அமெரிக்காவில் பல்வேறு மாற்றங்களை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முன்னெடுப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அமைவதற்கு முன்பு அமெரிக்காவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்கு இடம்பெயர சில அமெரிக்க தொழிலதிபர்களும், பிரபலங்களும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றி உறுதியானதும் கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயருவது குறித்து கூகுள் இணையத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கர்கள் தேடியுள்ளனர்.
இதன் அடிப்படையில், அமெரிக்காவை விட்டு வெளியேரும் அமெரிக்கர்களை தங்கள் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது இத்தாலிய கிராமமான ஒலோலாய். இந்த கிராமம் மத்திய தரை கடலில் இருக்கும் இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான சார்டீனியா தீவில் அமைந்துள்ளது.
இங்கு வசித்து வந்த மக்களில் பலர் பிழைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இங்கிருந்து வெளியேறி இத்தாலியின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது. இதை ஒட்டி அப்பகுதியின் மக்கள்தொகை வீழ்ச்சியை சரிகட்டும் வகையில் 1 யூரோ முதல் 1 லட்சம் யூரோ மதிப்பிலான வீடுகள் வெளிநாட்டவர்கள் வசிப்பதற்குத் தயாராக உள்ளன என முன்பு பலமுறை அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இந்தப் பகுதியை சேர்ந்த மேயர் ஃபிரான்செஸ்கோ கொலும்பு, டிரம்பின் தேர்வை அடுத்து அமெரிக்காவைவிட்டு வெளியேறும் அமெரிக்கர்களை ஒலோலாய் கிராமத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார்.