லெபனானில் மத்திய பெய்ருட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
வியாழக்கிழமை இரவு எந்தவித முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லாமல் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். பெய்ருட்டில் இரு குடியிருப்புக் கட்டடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு கட்டடம், இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகே உள்ளது.
ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினர் செயல்பட்டு வரும் பெய்ருட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது.
லெபனானுக்கு ஆதரவாக 'லெபனானுக்கான ஐ.நா.வின் இடைக்கால் படை' (யுனிஃபில்) 1978-ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் நிறுவப்பட்டது. இந்த நிலைகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக யுனிஃபில் குற்றம்சாட்டியுள்ளது.
"யுனிஃபில் தலைமையகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐ.நா. அமைதிப் படை நிலைகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரு யுனிஃபில் வீரர்கள் காயமடைந்துள்ளார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிஃபில்லில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சேவையாற்றுகிறார்கள். இதில் காயமடைந்த வீரர்கள் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.