லெபனானில் ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினரின் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 490 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் மற்றும் காஸாவிலுள்ள ஹமாஸ் இடையே போர் மூண்டது. இதன் எதிரொலியாக லெபனானிலுள்ள ஹெஸ்புல்லா ஆயுதக் குழு மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஹெஸ்புல்லா ஆயுதக் குழு காஸாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. ஹெஸ்புல்லாவுக்கு ஈரானின் ஆதரவு உள்ளது.
இந்தச் சூழலில் தான் லெபனானில் அண்மையில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்தன. இதில் குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தார்கள். பேஜர்கள் வெடித்ததன் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸ்ஸாத் இருப்பதாக ஹெஸ்புல்லா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து, ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினர் பயன்படுத்தும் சிறிய ரக ரேடியோக்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளார்கள். இரண்டு நாள்களில் அடுத்தடுத்து நடந்த தாக்குதல்கள் மூலம் மொத்தம் 32 பேர் உயிரிழந்தார்கள்.
இதுவே உலக நாடுகள் மத்தியில் கவலையை அதிகரித்த நிலையில், திங்கள்கிழமை ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினரின் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 35 குழந்தைகள், 58 பெண்கள் உள்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 1,645 பேர் காயமடைந்துள்ளார்கள். 2006-க்கு பிறகு ஹெஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, லெபனான் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான சிடோனிலிருந்து பெய்ருட்டுக்கு மக்கள் மிகப் பெரிய அளவில் இடம்பெயரத் தொடங்கினார்கள்.
தாக்குதல் நடத்தப்போகும் பகுதியிலிருந்து வெளியேறுமாறு விடுக்கப்படும் எச்சரிக்கைகளை லெபனான் மக்கள் கவனிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார். எங்களுடையத் தாக்குதல் நிறைவடைந்தவுடன், நீங்கள் உங்களுடைய வீடுகளுக்குப் பாதுகாப்பாக திரும்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இஸ்ரேல் - லெபனான் எல்லையிலிருந்து ஹெஸ்புல்லா குழுவினரை வெளியேற்றுவதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொள்ளும்" என்றார்.