
தெற்கு காஸாவில் அமைந்துள்ள பிரதான மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
உயிரிழந்தவர்களில் 3 பேர் ஊடகவியலாளர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்திலுள்ள முக்கிய நகரமான காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஏராளமானோர் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. உலக நாடுகள் பல கண்டனங்களைப் பதிவு செய்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவதாக இல்லை.
இந்நிலையில், தெற்கு காஸா பகுதியில் அமைந்துள்ள பிரதான மருத்துவமனையின் நான்காவது தளத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 15 பேர் உயிரிழந்துள்ளார்கள். இவர்களில் 3 பேர் ஊடகவியலாளர்கள். இருவர் அல் ஜஸீரா மற்றும் ராய்டர்ஸ் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவே மருத்துவமனையில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
காஸா சுகாதார அமைச்சகத்தின்படி, நாசர் மருத்துவமனையின் நான்காவது தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் வந்தவுடன் சில நிமிடங்களிலேயே அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, போரில் ஏறத்தாழ 62,868 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள்.
Gaza | Israel War | Israel Gaza | Gaza Hospital