இஸ்ரேலில் தொடரும் மத்திய அரசு - நீதித்துறை மோதல்: சட்டம் ரத்து

நாடாளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே தொடர்கிறது மோதல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுREUTERS
1 min read

இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றம் ஜூலை 2023-ல் இஸ்ரேலின் நீதித்துறையைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்திருந்தது. இதன்படி அரசின் சில முடிவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. அந்த முடிவுகளை மாற்ற முடியாது.

லிகுட் கட்சியின் பெஞ்சமின் நேதன்யாஹு தற்போதைய இஸ்ரேல் பிரதமராக இருக்கிறார். அவருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையில் தொடர் பிரச்னைகள் இருந்து வருகின்றன. அவருடைய கூட்டணியின் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை அமைச்சராக்குவதை உச்ச நீதிமன்றம் தடை செய்தது. நேதன்யாஹு மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றின் மீதான விசாரணைகள் இன்னமும் நீதிமன்றத்தில் தொடர்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்றம், ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை மட்டுப்படுத்த முனைந்தது. இதனால் நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது.

இந்தியா போல் இல்லாமல், இஸ்ரேலில் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் கிடையாது. பிரதமரிடம்தான் அதிகாரம் குவிந்துள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர், கிட்டத்தட்ட இந்தியாவைப் போலவே பெயரளவுக்குத்தான் அதிகாரம் உடையவர். ஒரு கட்சி அதிகாரம் என்பது இஸ்ரேலில் வெகு காலமாகவே இல்லை. கூட்டணி அமைத்துத்தான் பெரும்பான்மை கொண்ட ஆட்சியே அமையும். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தனிப்பெரும் அதிகாரத்தைக் கொண்டதாக ஆகிவிடுகிறது.

இதைத் தடுக்கவே நேதன்யாஹு அரசு சட்டம் கொண்டுவந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் அடங்கிய 15 பேர் அமர்வு, இந்தச் சட்டம் செல்லுபடியாகாது என்று 8-க்கு 7 என்ற கணக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in