கிழக்கு காஸாவில் புலம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமில் செயல்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
புலம்பெயர்ந்தவர்ளைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் மற்றும் கமாண்டர்கள் பதுங்கியிருந்த கட்டுப்பாட்டு மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, தகர்க்கப்பட்டதாக இஸ்ரேலியப் படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் காஸாவில் உள்ள பள்ளிகளைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்று கூறி பள்ளிகளைக் குறிவைத்து இஸரேல் நடத்தும் 5-வது தாக்குதல் இது.
ஆகஸ்ட் 1-ல் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு. ஆகஸ்ட் 4-ல் இரு பள்ளிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு. ஹமாமா பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டார்கள்.
இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தார்கள். 250 பேர் பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து, காஸா மீது முழு ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.