லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 274 ஆக உயர்வு

உயிரிழந்தவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடக்கம். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

லெபனானில் ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினரின் 800-க்கும் மேற்பட்ட இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் மற்றும் காஸாவிலுள்ள ஹமாஸ் இடையே போர் தொடங்கியதிலிருந்து, லெபனானிலுள்ள ஹெஸ்புல்லா ஆயுதக் குழு மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஹெஸ்புல்லா ஆயுதக் குழு காஸாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. ஹெஸ்புல்லாவுக்கு ஈரானின் ஆதரவு உள்ளது.

இந்தச் சூழலில் தான் லெபனானில் அண்மையில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்தன. இதில் குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தார்கள். பேஜர்கள் வெடித்ததன் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸ்ஸாத் இருப்பதாக ஹெஸ்புல்லா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து, ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினர் பயன்படுத்தும் சிறிய ரக ரேடியோக்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளார்கள். இரண்டு நாள்களில் அடுத்தடுத்து நடந்த தாக்குதல்கள் மூலம் மொத்தம் 32 பேர் உயிரிழந்தார்கள்.

இந்த நிலையில் லெபனானில் 300 இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்கு முன்பு, ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினர் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகக் குறி வைத்த இடங்களுக்கு அருகிலிருந்த வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வீடுகளிலிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு ஹெஸ்புல்லாவின் 300-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன என்றார். லெபனான் அதிகாரிகள் தரப்பில், மக்களை அப்புறப்படுத்துவதற்காக இஸ்ரேலிலிருந்து 80 ஆயிரம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாக இன்று மாலை தெரிவிக்கப்பட்டது.

தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. இதில் 21 குழந்தைகள், 39 பேர் அடக்கம் என லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள்.

ஹெஸ்புல்லாவின் பகுதிகள் என 800 இலக்குகளைக் குறிவைத்து தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹெஸ்புல்லாவின் முக்கிய இலக்குகளைக் குறிவைக்கவுள்ளதால், இந்த இடங்களைத் தவிர்க்குமாறு லெபனான் மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, லெபனானில் பள்ளிகளை மூட அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அப்புறப்படுத்தப்படும் மக்களை பள்ளிகளில் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

லெபனான் மீதான இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அபாயகரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 7-ல் போர்ச் சூழல் தொடங்கியதிலிருந்து லெபனான் மீது நடத்தப்படும் மிக மோசமான தாக்குதல் இது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in