
காஸா மீதான தாக்குதலை நிறுத்தச் சொல்லி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளுர் நிர்வாகிகள் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7, 2023-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டார்கள். 251 பேர் பணயக் கைதிகளாகக் கொண்டுச் செல்லப்பட்டார்கள். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தப் போர் கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. இஸ்ரேல் போர்க் குற்றத்தில் ஈடுபடுவதாகப் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தபோதிலும், காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்துவதாக இல்லை.
இந்நிலையில் தான், இப்பிரச்னைக்குத் தீர்வு காண 20 அம்சங்கள் கொண்ட விரிவான திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட டிரம்ப் முன்மொழிந்தார். இதை ஏற்க ஹமாஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் அளித்திருந்தார். இதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது. நீண்டகால அமைதியை நிலைநாட்ட ஹமாஸ் தயாராகிவிட்டதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, காஸா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தினார் டிரம்ப். தனது சமூக ஊடகப் பக்கங்களில், "காஸா மீது குண்டுபொழிவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். இதை நிறுத்தினால் தான், பணயக் கைதிகளை பாதுகாப்பாகவும் வேகமாகவும் மீட்க முடியும்" என்று டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், "இது காஸா சார்ந்தது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதும்கூட" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
டிரம்பின் 20 அம்சங்கள் கொண்ட விரிவான திட்டத்தின் முதல் கட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அலுவலகம் சனிக்கிழமை காலை தெரிவித்தது.
இருந்தபோதிலும், டிரம்பின் வலியுறுத்தலை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. காஸா நகரில் நடத்திய தாக்குதலில் வீட்டிலிருந்த 4 பேர் உயிரிழந்ததாக காஸா நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள். மற்றொரு தாக்குதல் தெற்கில் கான் யூனிஸில் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.
Donald Trump | Gaza | Israel | United States of America | Hamas |