
காஸாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 2023 முதல் போர் நிலவி வருகிறது. அக்டோபர் 7, 2023-ல் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர் 1,200-க்கும் மேற்பட்டவர்களைப் படுகொலை செய்தது. மேலும், 251 பேரைப் பிணைக் கைதிகளாக் கடத்திச் சென்றார்கள்.
இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழித்தொழிக்க இஸ்ரேல் உறுதியெடுத்தது.
நவம்பர் 2023-ல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதன்முறையாக போர் நிறுத்தம் ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது ஹமாஸ் வசம் இருந்த 105 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இஸ்ரேலிய சிறைகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
எனினும், மீண்டும் போர் மூண்டது. பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 46,645 பாலஸ்தீனர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ளார்கள். 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள்.
இஸ்ரேல் - காஸா இடையிலான போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. 15 மாதங்களாக நடந்து வந்த போரை நிறுத்த அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் நீட்சியாக போரை நிறுத்துவதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் தரப்பில் அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த 15 அன்று உறுதி செய்யப்பட்டது.
போர் நிறுத்தம் என்பது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக காஸாவில் 42 நாள்களுக்குப் போர் நிறுத்தப்படும். இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்படுவார்கள். நூற்றுக்கணக்கான பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேலியப் படைகள் காஸா எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெறும். இதன்மூலம், பாலஸ்தீனர்கள் மீண்டும் இடம்பெயரலாம்.
இருந்தபோதிலும், போர் நிறுத்தத்துக்கான ஒப்புதல் அளிக்க இஸ்ரேலிடம் தாமதம் தென்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஜனவரி 16 அன்று கூடியது. எனினும், இதுகுறித்து வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. கடைசி நேரத்தில் ஒப்பந்தத்தில் மாற்றங்களைக் கொண்டு வர ஹமாஸ் முயற்சிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டினார். அதேசமயம், இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்தது.
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், மிகக் கொடுமையான முறையில் அரங்கேறி வந்த போர் முடிவுக்கு வருகிறது. இஸ்ரேலின் முழு அமைச்சரவை அடுத்து கூடவுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான இறுதி ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
போர் நிறுத்தமானது ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வருகிறது. பிணைக் கைதிகள் பரஸ்பரம் விடுதலை செய்யப்படவிருக்கிறார்கள்.
டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்பது கவனிக்கத்தக்கது.