
ஈரான் நாட்டிலுள்ள அணுசக்தி செறிவூட்டல் திட்ட நிலையம் மற்றும் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமனேய் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி நிலையம் மீது முன்னெச்சரிக்கை தாக்குதல்களை இன்று (ஜூன் 13) இஸ்ரேல் நடத்தியது. இதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்டகாலமாக பகை நிலவி வரும் இரு நாடுகளுக்கு இடையே ஒரு முழுமையான போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஈரானின் ராணுவத் தளபதி முகமது பகேரி மற்றும் புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி ஹொசைன் சலாமி ஆகியோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களுக்குள், இஸ்ரேல் மீது 100-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி ஈரான் பதிலடி கொடுத்ததாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த தாக்குதலை `ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் நாட்டின் வரலாற்றில் இது மிகவும் முக்கியமான தருணம் என்று கூறியுள்ளார். மேலும், அணு ஆயுத தயாரிப்புக்கான `ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின்’ (மையத்தின்) மீது இஸ்ரேலிய படைகள் தாக்கியதாகவும் காணொளி வாயிலாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் கடுமையான தண்டனையைப் பெறும் என்று ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமனேய் கூறியுள்ளார்.
`இன்று காலை ஈரானுக்கு எதிரான ஒரு குற்றத்தைக் கட்டவிழ்த்துவிட்டு சியோனிச ஆட்சி (இஸ்ரேல்) அதன் மோசமான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் மூலம், தனக்கான கசப்பான எதிர்காலத்தை சியோனிச ஆட்சி தீர்மானித்துள்ளது, அதை அது நிச்சயமாகப் பெறும்’ என்று காமனேய் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.