

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஈரானில் கடந்த சில மாதங்களுக்கு முன் மதகுரு கமேனி ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அதனைக் கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு ராணுவம் களமிறக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா எச்சரிக்கை
இதையடுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும். இல்லையெனில், அமெரிக்கப்படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஈரான் உத்தரவாதம் அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக, ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே ஓமன் நாட்டின் முயற்சியால் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்நிலையில் இன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர், ஈரான் மீது தாக்குதலை தொடங்கினர். தலைநகர் டெஹ்ரான் மற்றும் ஜோம்ஹாரி பகுதிகளில் அடுத்தடுத்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதனால் உயர்ந்த கட்டடங்களில் தீ பரவியது. சில இடங்களில் இஸ்ரேலின் ஏவுகணைகளை ஈரான் ராணுவம் நடுவானிலேயே அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஈரான் முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டு வரும் நிலையில், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமரின் உரை
இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய காணொளியை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“ஒரு மணி நேரத்திற்கு முன்புதான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியால் ஏற்படும் அச்சுறுத்தலை அகற்றும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் நமது நண்பர் அதிபர் டிரம்ப்பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைமைக்கு நன்றி. 47 ஆண்டுகளாக, ஆயத்தோலாக்களின் ஆட்சி ‘இஸ்ரேலுக்கு மரணம்’, ’அமெரிக்காவுக்கு மரணம்’ என்று முழங்கி வருகிறது. இது நமது ரத்தத்தை சிந்தச் செய்துள்ளது, பல அமெரிக்கர்களை கொன்றுள்ளது, மேலும் தன் சொந்த மக்களையும் படுகொலை செய்துள்ளது. இந்த பயங்கரவாத ஆட்சி, முழு மனிதகுலத்தையும் அச்சுறுத்தும் அணு ஆயுதங்களைத் தன்னிடம் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படக் கூடாது. ஈரானிய மக்களின் அனைத்து பிரிவினருக்கும் அடக்குமுறையின் சுமையை உதறித் தள்ளி, சுதந்திரம் மற்றும் அமைதியை விரும்பும் மதிப்புகளை ஈரானுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது. இஸ்ரேலின் குடிமக்களே, உங்களை நான் அழைக்கிறேன். அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள். வரும் நாட்களில், ஆபரேஷன் சிங்க கர்ஜனை நடவடிக்கையின் போது, நாம் அனைவரும் பொறுமையையும் ஆன்மீக வலிமையையும் காட்ட வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் உறுதி
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது உரையில் கூறியிருப்பதாவது:-
இப்போது சிறிது நேரத்திற்கு முன்பு, அமெரிக்க ராணுவம் ஈரானில் பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. நமது நோக்கம், அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்காக ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை அகற்றுவதாகும். இது மிகக் கடுமையான, கொடூரமான மக்களால் ஆன ஒரு கொடூரக் குழு. அதன் அச்சுறுத்தும் செயல்பாடுகள் நேரடியாக அமெரிக்காவையும், நமது படைகளையும், வெளிநாடுகளில் உள்ள நமது தளங்களையும், உலகெங்கிலும் உள்ள நமது நட்பு நாடுகளையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றன. ஈரான் அரசு உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவாளராக உள்ளது. சமீபத்தில், தங்கள் சொந்த மக்கள் தெருவில் போராடியபோது பத்தாயிரக்கணக்கானவர்களைக் கொன்றது. அமெரிக்காவின் கொள்கை. குறிப்பாக என் ஆட்சியின் கொள்கை. இந்த பயங்கரவாத ஆட்சி ஒருபோதும் அணு ஆயுதம் பெறக்கூடாது. மீண்டும் சொல்கிறேன்: அவர்களால் ஒருபோதும் அணு ஆயுதம் பெற முடியாது. ஈரான் அணு ஆயுதம் பெறுவதை உறுதியாகத் தடுப்போம். மிக எளிய செய்தி: அவர்களால் ஒருபோதும் அணு ஆயுதம் பெற முடியாது. அமெரிக்க ராணுவத்தின் வலிமையையும் ஆற்றலையும் யாரும் சவால் விடக்கூடாது என்று இந்த ஆட்சி விரைவில் கற்றுக்கொள்ளும்.” என்றார்.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை
இருநாட்டின் பிரதமர்களும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதில் உறுதியாக உள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேறும்படி இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவையற்ற நகர்வுகளைத் தவிர்த்து, முடிந்தவரை வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்தியர்கள் செய்திகளைத் தொடர்ந்து கண்காணித்து, சூழ்நிலை விழிப்புணர்வைப் பராமரித்து, இந்தியத் தூதரகத்திடமிருந்து வரும் வழிகாட்டுதல்களுக்காகக் காத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளது.
Israel launched preventive missile strikes on Iran, explosions heard in Tehran