ஆயுதத்துடன் பாலஸ்தீனத்தில் உள்ள அல் ஜஸீரா செய்தி நிறுவனத்தின் அலுவலகத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அடுத்த 45 நாள்களுக்கு அலுவலகத்தை மூட உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
`இன்று (செப்.22) அதிகாலை பாலஸ்தீனத்தின் ராமல்லா நகரில் உள்ள அல் ஜஸீரா அலுவலகத்துக்குள் முகக்கவசம் அணிந்து ஆயுதங்களுடன் நுழைந்த இஸ்ரேல் ராணுவ வீரர்கள், 45 நாள்களுக்கு அலுவலகத்தை மூடுவதற்கான நீதிமன்ற உத்தரவைத் தலைமை அதிகாரி வலீத் அல்-ஒமாரியிடம் அளித்தனர்’ என்று அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் வழங்கிய நீதிமன்ற உத்தரவில் தீவிரவாதத்துக்கு அல் ஜஸீரா செய்தி நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவதால், பாலஸ்தீனத்தில் உள்ள அதன் அலுவலகத்தை மூட உத்தரவிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இரவு நேர ஷிஃப்டில் இருந்தபடி அல் ஜஸீரா அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த பணியாளர்கள் அனைவரையும் தங்களது உடைமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டதாகவும் அல் ஜஸீரா வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ராமல்லா நகரத்தில் அல் ஜஸீரா அலுவலகம் அமைந்துள்ள இடம் முழுக்க முழுக்க பாலஸ்தீன தேசிய அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகும். ஆனால் பாலஸ்தீன தேசிய அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி நுழைந்து இவ்வாறு உத்தரவிடுவது இது முதல்முறை அல்ல.
`பாலஸ்தீனியர்கள் குறித்த உண்மையான செய்திகளையும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்த செய்திகளையும் தவிர்க்க இவ்வாறான நடவடிக்கைகளில் 1948-ல் இருந்து இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது’ என்று பாலஸ்தீன விவகாரங்கள் குறித்து தொடர்ந்து எழுதிவரும் பிரபல பத்திரிக்கையாளரான ரமி ஜார்ஜ் கவுரி, அல் ஜஸீராவுக்குப் பேட்டியளித்துள்ளார்.