போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு: அமைதி காக்கும் ஈரான்

போர் நிறுத்தம் தற்போது அமலில் உள்ளது; அதை மீறவேண்டாம்.
அதிபர் டிரம்ப்
அதிபர் டிரம்ப்Carlos Barria
1 min read

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தத்திற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அது தொடர்பாக இதுவரை ஈரான் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் கடந்த ஜூன் 13 அன்று தொடங்கியது. இரு நாடுகளும் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று (ஜூன் 24) முதல் போர் நிறுத்தம் அமலாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூன் 23) அறிவித்தார்.

இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி,

`தற்போதைக்கு, போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இருப்பினும், ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத தாக்குதலை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் நிறுத்தினால், அதன்பிறகு தாக்குதலை தொடர எங்களுக்கு எந்தவித நோக்கமும் இல்லை.

எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்’ என்றார்.

இதைத் தொடர்ந்து ஏறக்குறைய ஒரு மணிநேரம் கழித்து, மீண்டும் பதிவிட்ட அராக்சி,

`இஸ்ரேலின் அத்துமீறலுக்கு தண்டனை வழங்குவதற்காக நமது சக்திவாய்ந்த ஆயுதப் படைகளின் ராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை (அதிகாலை 4 மணி வரை) தொடர்ந்தன.

அனைத்து ஈரானியர்களுடனும் இணைந்து நமது அன்பான நாட்டை தங்கள் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாதுகாக்கத் தயாராக இருக்கும், எதிரியின் எந்தவொரு தாக்குதலுக்கும் கடைசி நிமிடம் வரை பதிலளித்த நமது துணிச்சலான ஆயுதப் படைகளுக்கு நன்றி கூறுகிறேன்’ என்றார்.

எனினும், போர் நிறுத்தம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஈரான் தரப்பு வெளியிடவில்லை. ஆனால் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொண்டதாக சி.என்.என். உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியிட்டன.

அதன்பிறகு, இஸ்ரேலும் ஈரானும் இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி காலை 11 மணி அளவில் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக கணக்கில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், `போர் நிறுத்தம் தற்போது அமலில் உள்ளது; அதை மீறவேண்டாம்’ என்றார்.

இதன் தொடர்ச்சியாக, மேற்கு ஈரானில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தி, அது தொடர்பான காணொளிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளதாக இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணி அளவில், அல் ஜசீரா செய்தி  வெளியிட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in