
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்று ஈரானிய மூத்த ராணுவத் தளபதி கூறியதற்கு பாகிஸ்தான் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
`ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டைப் பயன்படுத்தினால், பாகிஸ்தானும் அணுகுண்டு வீசி இஸ்ரேலைத் தாக்கும் என அந்நாடு எங்களிடம் கூறியுள்ளது’ என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) தளபதியும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான ஜெனரல் மொஹ்சென் ரெசாய் ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஈரானாலும், இஸ்ரேலாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் பரஸ்பர ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இத்தகைய கருத்துக்களை ஈரான் வெளியிட்டுள்ளது.
ஆனால், ஈரான் தளபதியின் கூற்றை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் உடனடியாக நிராகரித்தார். அத்தகைய உறுதிமொழியை நாங்கள் அளிக்கவில்லை என்றும் கூறினார். இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`எங்கள் தேசத்திற்கும் பாதுகாப்பிற்கும், நன்மைக்காகவும் மட்டுமே எங்களின் அணுசக்தித் திறன். இஸ்ரேலால் அதன் அண்டை நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் மேலாதிக்க கொள்கைகளை ஒருபோதும் நாங்கள் பின்பற்றுவதில்லை’ என்றார்.
அதேநேரம், அணு ஆயுதப் பயன்பாடு குறித்த ஈரானின் பேச்சை பாகிஸ்தான் நிராகரித்தாலும், இஸ்ரேலுடனான மோதலில் ஈரானுக்கான வெளிப்படையான ஆதரவை அந்நாடு தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானுக்குப் பின்னால் நிற்பதாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், யூத நாடான இஸ்ரேலுக்கு எதிரான இஸ்லாமிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தது.