மத்திய கிழக்கில் லெபனானும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு மத்தியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது இஸ்ரேல் அரசு.
`இஸ்ரேல் ராணுவ தளங்கள் மீது 320 ராக்கெட்டுகளுக்கும் மேல் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த முதற்கட்டத் தாக்குதல் கடந்த ஜூலையில் எங்கள் தளபதியைக் கொன்றதற்காக பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது’ என இன்று (ஆகஸ்ட் 25) காலை அறிவித்துள்ளது லெபனான் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா.
ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தப் போவதை அறிந்துகொண்ட இஸ்ரேல், அதற்கு முன்பு அதிகாலை நேரத்தில், இஸ்ரேல்-லெபனான் எல்லையோரப் பகுதியில், லெபனான் நாட்டுக்குள் 5 கி.மீ வரை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய இஸ்ரேல் பாதுகாப்புப்படை, `தெற்கு லெபனானில் வசிக்கும் பொதுமக்களுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம். உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் இஸ்ரேல் பகுதிக்குள் தாக்குதல் நடத்த ஹிஸ்புல்லா திட்டமிடுகிறது. இதனால் உங்களுக்கு அபத்து ஏற்படும். எனவே அந்தப் பகுதியில் இருந்து விலகி இருங்கள்’ என்று அறிவித்துள்ளது.
விதிவிலக்கான சூழ்நிலையில் இஸ்ரேல் அரசால் அவசர நிலை பிரகடனப்படுகிறது. இதைத் தொடர்ந்து வெளித்தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கும். இந்த 48 மணி நேர கால வரம்பை இஸ்ரேல் அரசு நினைத்தால் மேலும் நீட்டிக்க முடியும்.
கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனின் காஸாவில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான ஹமாஸுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே கடுமையாகப் போர் நடந்து வருகிறது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த மாதம் ஈரானில் வைத்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.