ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கை ஏன்?: இஸ்ரேல் விளக்கம்
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இன்று (ஜூன் 13) இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் அந்நாட்டின் அணுசக்தி செறிவூட்டல் திட்ட நிலையம் மற்றும் சில இராணுவ தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதலில், ஈரானின் முன்னணித் தளபதிகள் சிலர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் மீதான இந்த தாக்குதலுக்கு `ஆபரேஷன் ரைசிங் லயன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து விரிவாக விளக்கமளித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
ஏன்?
ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்கும் வகையிலான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
அண்மைக்காலமாக, இஸ்ரேலின் அழிவுக்காக ஈரான் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது, இது வெறுமனே இலட்சியமாக மட்டுமல்லாமல், நிறைவேற்றப்படவேண்டிய கட்டாய உத்தரவு போலவும் உள்ளது.
இஸ்ரேலை நிர்மூலமாக்கவேண்டும் என்று அப்பட்டமாகவும், தொடர்ச்சியாகவும், பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் ஈரானின் தலைமை அழைப்புவிடுத்து வருகிறது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் உலகின் முதன்மையான நாடாக ஈரான் உள்ளது.
ஈரானின் அறிவிக்கப்பட்ட லட்சியமான இஸ்ரேலை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைக்காகவே, பல ஆண்டுகளாக இராணுவக் கட்டமைப்பில் அந்நாடு முதலீடு செய்து வந்தது.
விரிவான வகையிலும், ரகசியமான முறையிலும் அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் ஊக்குவித்து வருகிறது. அதேநேரம் தீய நோக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதன் மூலம் உலகை ஏமாற்றுவதோடு மட்டுமல்லாமல், இராஜதந்திர முயற்சிகளை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதிக்கான நோக்கங்களுக்காக அல்லாமல், மாறாக இராணுவ நோக்கங்களுக்காக செயல்படுத்தப்படுகிறது என்பதை சர்வதேச அணுசக்தி அமைப்பின் அறிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.
யுரேனியத்தை விரைவாக செறிவூட்டும் அதே வேளையில், பல ஆண்டுகளாக ஈரான் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. மேலும் ஆயுதமயமாக்கல் முயற்சிகளில் தொடர்ந்து முன்னேற்றி வருகிறது.
எதனால் இப்போது?
அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதற்கு இன்னும் சில கணங்களே உள்ளன.
ஈரானால் அச்சுறுத்தல் உள்ளது, எனவே மிகவும் தாமதமாகும் முன்பு அதை அகற்றுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியிருக்கவில்லை.
9-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை தயாரிக்கத் தேவையான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிக அளவில் ஈரான் குவித்துள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி அதிகரிப்பு மூலம், கடந்த மூன்று மாதங்களில் செறிவூட்டப்பட்டு குவிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான நோக்கம் கொண்ட நடவடிக்கை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இடையே நடைபெற்றுள்ளது.
அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஈரான் அண்மையில் எட்டியுள்ளது. இத்தனை துரிதமான முயற்சியை கடந்த இரண்டு தசாப்தங்களில் கண்டதில்லை.
இராணுவ நடவடிக்கை:
தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு. கடைசிகட்ட முயற்சியாக, துல்லியமான முறையிலும் சக்திவாய்ந்த வகையிலுமான தற்காப்புப் பணியை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது.
இராணுவ இலக்குகள் மற்றும் அணு ஆயுத முயற்சிகளின் மீதே இந்த நடவடிக்கை கவனம் செலுத்தியது.
ஈரான் மக்களை இஸ்ரேல் குறிவைக்கவில்லை, மாறாக அதன் பாதுகாப்பை அச்சுறுத்தும் பயங்கரவாத சக்திகளையே குறிவைத்தது.
(பயங்கரவாதத்தில்) சம்மந்தப்படாத பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்கைக் குறைப்பதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.