இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டில் லெபனானிலிருந்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின்போது பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அவருடைய மனைவி சாரா வீட்டில் இல்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தாக்குதலின்போது யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர லெபனானிலிருந்து மேலும் இரண்டு ட்ரோன்கள் வந்ததாகவும், இதை இஸ்ரேல் விமானப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டுள்ளன.
போர் விரைவில் முடிவுக்கும் வரும் என இஸ்ரேல் பிரதமர் நேற்று பேசிய நிலையில், இன்று அவருடைய வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காஸா மக்களிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று பேசியதாவது:
"யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டுவிட்டார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் துணிச்சல் மிகு வீரர்கள் சின்வரை ராஃபாவில் கொன்றார்கள். காஸாவில் இது போரின் முடிவு அல்ல. போர் முடிவதற்கான தொடக்கம் இது. காஸா மக்களுக்கான செய்தி மிக எளிமையானது. இந்தப் போரை நாளைகூட முடித்துக்கொள்ளலாம். ஹமாஸ் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்து பிணைக் கைதிகளை விடுவித்தால் போர் முடிவுக்கு வரும்" என்றார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு.
ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்ட பிறகு இஸ்ரேல் பிரதமர் இந்த உரையை நிகழ்த்தினார். கடந்தாண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்தவர் சின்வார்.