
ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்க ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் திட்ட நிலையம் மற்றும் ராணுவத் தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலம் மற்றும் பிற நகரங்களில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் இரு நாடுகளும் பெரும் சண்டையைத் தொடர்ந்துள்ளன.
ஈரான் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"தெஹ்ரானில் ஈரான் அரசின் அணு ஆயுதத் திட்டம் தொடர்புடைய இலக்குகளைக் குறிவைத்து விரிவான தாக்குதல்களை இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை நடத்தி முடித்துள்ளது. குறிவைக்கப்பட்ட இலக்குகளில் ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எஸ்பிஎன்டி அணு ஆயுதத் திட்டத்தின் தலைமையகம் மற்றும் கூடுதல் இலக்குகள் அடங்கும்."
இஸ்ரேல் குறிவைத்த இலக்குகள் அனைத்தும் ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்புடைய இடங்கள்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை மூலம் இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் நகரங்களில் அபாய எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டுள்ளது.