
ஹிஸ்புல்லா தீவிரவாத தலைவர் ஹசன் நஸ்ரல்லா பயன்படுத்தி வந்த பதுங்குக் குழியில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான தங்கமும், பணமும் வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கிழே அமைக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்குச் சொந்தமான ஒரு பதுங்குக் குழியில் தங்கமும், பணமும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இவை ஹிஸ்புல்லாவின் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.
இது தொடர்பாக காணொளியில் பேசியுள்ள இஸ்ரேல் ராணுவத்தின் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, `ஹசன் நஸ்ரல்லாவின் இந்தப் பதுங்குக் குழியை வேண்டுமென்றே அல் சாஹேல் மருத்துவமனைக்குக் கீழே அமைத்துள்ளனர். சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான தங்கமும், பணமும் அதில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பணத்தை லெபனானின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அது ஹிஸ்புல்லாவின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தீவிரவாத செயல்களுக்கும், இஸ்ரேலை தாக்கவும் அந்த பணத்தை ஹிஸ்புல்லா பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என லெபனான் அரசையும், அந்நாட்டு அதிகாரிகளையும், சர்வதேச அமைப்புகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
இந்த பதுங்குக் குழியைச் சென்றடைய மருத்துவமனைக்கு அருகே உள்ள இரண்டு கட்டடங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பதுங்குக்குழிக்குள் இருந்தபடி செயல்படும் வகையில் கட்டில் மற்றும் தொலைதொடர்பு சாதன வசதிகள் உள்ளேயே இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார் டேனியல் ஹகாரி.
கடந்த 24 மணி நேரமாக லெபானானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிதி ஆதார மையங்கள் மற்றும் தளவாட மையங்களைக் குறிவைத்து 300-க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது இஸ்ரேல்.