அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 18-வது நாளைத் தொட்டுள்ள நிலையில், ஈரானின் ராணுவ தலைவர்களைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதலைத் தொடங்கின. இதில் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார்.
பழிவாங்கும் ஈரான்
அதைத் தொடர்ந்து அவரது மகன் முஜ்தபா காமெனி உயர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். மேலும், அலி காமெனியின் இறப்புக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது மட்டுமன்றி தனது அண்டை நாடுகளான வளைகுடா நாடுகளின் மீதும் ஈரான் ஏவுகணை, டிரோன்கள் உள்ளிட்டவற்றை ஏவி தாக்கி வருகிறது. மறுபுறம் ஈரானை இஸ்ரேல் - அமெரிக்கப் படைகளும் தாக்கி வருகின்றன.
ராணுவ தலைவர் கொலை?
இந்நிலையில், ஈரானின் உயர் தேசிய ராணுவ தலைவரான அலி லாரிஜானியைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “ஆட்சியாளர்களின் தலைவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்; அவர்களின் திறன்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. நமது இராணுவம் வலிமையுடன் செயல்பட்டு, ஏவுகணை திறன்களையும் மூலோபாய உள்கட்டமைப்புகளையும் தொடர்ந்து தாக்கி அழித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
அலி லாரிஜானிக்கு என்ன ஆனது?
ஈரானின் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் கடந்த மார்ச் 13 அன்று உயர் ராணுவ தலைவர் அலி லாரிஜானியை நேரில் கண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் அவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதையடுத்து ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து இரண்டாவது முறையாக ஈரானின் உயர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
ஆனால், அலி லாரிஜானி கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை ஈரானின் ஊடக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் எழுத்துகள் தெளிவாக இல்லை என்றாலும், அவர் உயிருடன் இருப்பதற்கான குறியீடாக அது பார்க்கப்படுகிறது. மேலும், லாரிஜானி இறந்ததற்கான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஈரான் சார்பில் வெளியாகவில்லை.
பசிஜ் தளபதி கொலை?
அதேபோல் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உள்நாட்டுப் பாதுகாப்பு துணை ராணுவப் பிரிவான பசிஜின் தளபதி குலாம்ரெசா சுலைமானியைக் கொன்றுவிட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.“ராணுவப் புலனாய்வுத் துறையிடமிருந்து கிடைத்த துல்லியமான உளவுத் தகவலின் வழிகாட்டுதலின்படி, கடந்த ஆறு ஆண்டுகளாக பசிஜ் பிரிவின் தளபதியாக இருந்த குலாம் ரெசா சுலைமானியை, விமானப்படை தெஹ்ரானின் மையப்பகுதியில் கொன்றது” என்று அதன் எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதையும் ஈரான் உறுதிப்படுத்தவில்லை.
As the war between the US, Israel and Iran enters its 18th day, Israel has announced that it has killed Iranian military leaders.