
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலை ஈரான் தலைவர் கமேனி பொதுச்சேவை என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள மசூதியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில், இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹெஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் நினைவேந்தல் கூட்டத்தில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி உரையாற்றினார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய பிறகு, இஸ்ரேலின் மிகப் பெரிய குறியாக இருக்கும் நிலையில், இவர் ஆதரவாளர்கள் மத்தியில் கையில் துப்பாக்கியுடன் தோன்றி உரையாற்றினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை போதனை நிகழ்ச்சியில் கமேனி பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் இடையே உரையாற்றிய அவர், இஸ்ரேல் நீண்ட நாள்களுக்குத் தாக்குப்பிடிக்காது என்றார். இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலை பொதுச் சேவை என்று கமேனி குறிப்பிட்டார். ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பதாக இவர் அறிவிக்க, ஆதரவாளர்கள் "அனைவரும் நாங்கள் துணை நிற்கிறோம்" என்று முழக்கமிட்டார்கள்.
நஸ்ரல்லா குறித்து பேசிய அவர், "சய்யத் ஹசன் நஸ்ரல்லா நம்முடன் இல்லை. ஆனால், அவருடைய ஆன்மாவும் அவர் விட்டுச்சென்ற பாதையும் என்றும் நம்மை உத்வேகப்படுத்தும். நஸ்ரல்லாவின் இழப்பு வீண் போகாது. ரத்தம் சிந்தியிருக்கும் லெபனான் மக்களுக்கு உதவுவது அனைத்து முஸ்லிம்களின் பொறுப்பும் கடமையும்.
இருப்பிடத்துக்காகப் போராடும் லெபனான் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கும் அவர்களுடைய கோரிக்கையை மறுப்பதற்கும் எந்தவொரு சர்வதேச சட்டத்துக்கும் உரிமை கிடையாது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள நிலம் மற்றும் வளங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேலை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்துகிறது" என்றார் கமேனி.