
உலகின் பணக்கார நபரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசில் வகித்துவரும் பதவியில் இருந்து விரைவில் விலகவுள்ளதாக பொலிடிகோ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபராகப் பொறுப்பேற்ற கையோடு, அமெரிக்க அரசின் செலவீனங்களில் இருந்து சுமார் 1 டிரில்லியன் டாலர்களைக் குறைக்கும் நோக்கில், செயல்திறன் துறையை டொனால்ட் டிரம்ப் உருவாக்கினார். இதன் தலைவராக பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், எலான் மஸ்க் முறைசாரா ஆலோசகர் பொறுப்பில் செயல்பட்டு அவ்வப்போது அதிபர் அலுவலகத்திற்கு வந்து செல்வார் என்று அமெரிக்க அரசில் பணியாற்றும் மூத்த அதிகார ஒருவர் கருத்து தெரிவித்ததாக பொலிடிகோ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறப்பு அரசு ஊழியர் என்று நிலையில் உள்ள மஸ்கின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. பொலிடிகோ வெளியிட்ட இந்த செய்தியை வைத்து, அமெரிக்க அரசுப் பொறுப்பில் இருந்து மஸ்க் விலகப்போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், `சிறப்பு அரசு ஊழியர் என்ற வகையில், திறன் துறையில் அளப்பரிய பணியை செய்து முடித்த பிறகு, அரசுப் பணியில் இருந்து மஸ்க் விலகுவார் என்று அதிபர் டிரம்பும், எலான் மஸ்கும் முன்பே பொதுவெளியில் அறிவித்துள்ளார்கள்’ என்றார்.
முன்பே தீர்மானித்தபடி, 130 நாட்களில் எலான் மஸ்கின் பணி நிறைவடைய உள்ளது. அந்த வகையில், மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எலான் மஸ்கிற்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுவது தொடர்பாக கடந்த மார்ச் 31 அன்று அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்டபோது, `அவர் அற்புதமானவர் என்று நினைக்கிறேன். ஆனால் அவருக்கென மிகப்பெரிய நிறுவனம் உள்ளது. எப்படியும் ஒரு கட்டத்தில் அவர் திரும்பிச் செல்லத்தான் போகிறார்’ என்றார்.