
அமெரிக்க அதிபர் அலுவலகமாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், சீனப் பொருட்கள் மீது 245% சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீனப் பொருட்கள் மீது ஏற்கனவே 145% சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த அறிக்கையை முன்வைத்து, அது 245% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், இது எழுத்துப் பிழையாகக் கூட இருக்கலாம் என்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
மேலும், இந்த 245% சுங்க வரி அனைத்து சீனப் பொருட்கள் மீது ஒட்டுமொத்தமாக விதிக்கப்படவில்லை என்றும், ஏற்கனவே அமலில் உள்ள வரிகளுடன் புதிய வரிகளை சேர்த்தே 245% சுங்க வரி விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
உதாரணமாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிரிஞ்ச் மற்றும் ஊசிகள் மீது தற்போது 245% சுங்க வரி விதிக்கப்படுகிறது. முன்னதாக ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் 100% சுங்க வரி விதிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு 20% ஃபெண்டானில் வரி டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டது, அதற்கும் மேல் 125% பரஸ்பர வரி அறிவிக்கப்பட்டுள்ளதால், சிரிஞ்ச் மற்றும் ஊசிகள் மீது ஒட்டுமொத்தமாக 245% வரி விதிக்கப்படுகிறது.
சீனா தவிர்த்து, பிற உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரிவிதிப்பு நடைமுறையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து கடந்த வாரம் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். டிரம்பின் வரி விதிப்பு நடைமுறைக்குப் பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 125% சுங்க வரியை சீன அரசு விதித்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், `வரி மற்றும் வர்த்தகப் போர்களில் வெற்றியாளர் என யாரும் இல்லை. இந்த போர்களை எதிர்த்துப் போராட சீன விரும்பவில்லை, அதேநேரம் அவற்றுக்காக பயப்படவுமில்லை’ என்றார்.