அமெரிக்கா சொல்வது போல் கடலில் எண்ணெய் ஏதும் மிச்சமில்லை: ஈரான் எண்ணெய் அமைச்சகம் விளக்கம் | Iran | USA |

கடலில் உள்ள ஈரான் எண்ணெய்யின் விற்பனைக்கு அமெரிக்க பொருளாதாரத் துறை ஒரு குறுகிய கால அனுமதியை வழங்கியது...
அமெரிக்கா சொல்வது போல் கடலில் எண்ணெய் ஏதும் மிச்சமில்லை: ஈரான் எண்ணெய் அமைச்சகம் விளக்கம்
அமெரிக்கா சொல்வது போல் கடலில் எண்ணெய் ஏதும் மிச்சமில்லை: ஈரான் எண்ணெய் அமைச்சகம் விளக்கம் https://x.com/Ghodousi_saman
2 min read

அமெரிக்கா சொல்வது போல் சர்வதேச கடலில் உள்ள ஈரானின் கச்சா எண்ணெய் எதுவும் மிச்சமில்லை என்று ஈரானின் எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ராணுவ நடவடிக்கை 22 நாள்களாக இன்றும் தொடர்கிறது. இதற்குப் பதில் தாக்குதலாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

எண்ணெய் வளங்களின் மீது தாக்குதல்

உலக நாடுகள் பல தங்கள் எண்ணெய் வளங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளைத்தான் நம்பியுள்ளன. இதனையடுத்து ஈரான் குறிவைத்து மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் தாங்கும் கப்பல்கள் செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதாக அறிவித்துத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சமீபத்தில் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையைத் தாக்கியது ஈரான். இதனால் எரிவாயு உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எரிசக்தி தட்டுப்பாடு

ஈரானின் இந்தச் செயல்களால் உலகம் முழுவதும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 100 டாலரைக் கடந்து விற்பனையாகிறது.

அமெரிக்காவின் அறிவிப்பு

கச்சா எண்ணெய் விநியோகத்தைச் சீராக்கும் நடவடிக்கையாக ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் வெளியிட்ட அறிவிப்பில், “கடலில் தேங்கியிருக்கும் ஈரான் எண்ணெய்யின் விற்பனைக்கு அனுமதி அளித்து அமெரிக்க பொருளாதாரத் துறை ஒரு குறுகிய கால அனுமதியை வழங்குகிறது. தற்போது, சீனா இந்த சர்வதேச தடைசெய்யப்பட்ட இரானிய எண்ணெய்யை மலிவாகச் சேகரித்து வைத்திருக்கிறது. கடலில் உள்ள இருப்பைப் பயன்படுத்திக் கொள்ள உலகிற்கு தற்காலிக அனுமதி வழங்குவதன் மூலம், அமெரிக்கா சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உலக சந்தைகளுக்கு விரைவாக கொண்டு வரும். இது உலகளாவிய எரிசக்தி அளவை அதிகரித்து, ஈரானால் ஏற்படும் தற்காலிக விநியோக அழுத்தங்களை குறைக்க உதவும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஈரான் மறுப்பு

ஆனால், சர்வதேச கடலில் அப்படி ஈராணின் எண்ணெய் எதுவும் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரானின் எண்ணெய் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சமன் கோடுஸி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தற்போது, ஈரானிடம் கடலில் மிதக்கும் கச்சா எண்ணெய்யோ, சர்வதேச சந்தைகளுக்கு வழங்குவதற்கான எஞ்சியிருக்கும் எண்ணெய்யோ எதுவும் மிச்சமில்லை. அமெரிக்க கருவூலத்துறை அமைச்சரின் அறிக்கை வாங்குபவர்களுக்கு நம்பிக்கை அளித்து, சந்தையை உளவியல் ரீதியாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Iran says no floating crude or surplus available, after US eases sanction on Iran crude loaded on vessels as of March 19

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in