

இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி ஆய்வு மையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய தாக்குதல், 24 நாள்களாக நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி, ராணுவ உயர் தலைவர் அலி லரிஜானி உள்ளிட்ட முக்கிய பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் ரகசிய அணு ஆய்வு மையம்
தெற்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள டிமோனா நகரில் ஷிமோன் பெர்ஸ் நெகேவ் அணு ஆய்வு மையத்தை இஸ்ரேல் ரகசிய அணு ஆய்வு மையமாக நடத்தி வருவதாகத் தெரிகிறது. இஸ்ரேலின் அணுசக்தி இருப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் அந்நாடு வெளியிடாமலேயே இருக்கிறது. உலக நாடுகளிடையே ஆன அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடாமல் உள்ளது.
நேடன்ஸ்-க்காக பழிவாங்கும் ஈரான்
ஆனால், கடந்த மார்ச் 21 அன்று ஈரானின் அணுசக்தி நிலையமான நேடன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்குப் பதில் தாக்குதலாக ஈரான் டிமோனா அணு ஆய்வு மையத்தைத் தாக்கியதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனாலும் டிமோனா அணு ஆய்வு ம்மையத்திற்கு அருகில் நடந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல்
இஸ்ரேலின் பாதுகாப்பு அரண் செயலிழந்ததன் விளைவாகவே இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு அரண் செயலிழப்பை இஸ்ரேலிய பாதுகாப்புத்துறையும் உறுதி செய்துள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் தாவும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இஸ்ரேலின் ரகசிய அணு ஆய்வு மையம் தாக்கப்பட்டுள்ளது.
கதிர்வீச்சு கசிவு இல்லை
இது தொடர்பாக சர்வதேச அணு ஆற்றல் முகமை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவில் கூறியிருப்பதாவது:-
“இஸ்ரேலின் டிமோனா நகரில் ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றதாக சர்வதேச அணுசக்தி முகமைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இஸ்ரேலின் நெகேவ் அணு ஆய்வு மையத்திற்கு சேதம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் அதற்குக் கிடைக்கவில்லை. மேலும், கிடைத்த தகவல்களின்படி, அசாதாரணமான கதிர்வீச்சு அளவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் தலைமை இயக்குநர் ரஃபேல் மரியானோ க்ரோசி, அணுசக்தி நிலையங்களுக்கு அருகில், அதிகபட்ச ராணுவ நிதானம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
More than 20 people have been seriously injured in an Iranian attack on a secret Israeli nuclear research facility.