இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறைவு: ஈரான்

இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறைவு: ஈரான்

இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால், எங்களுடைய ராணுவ நடவடிக்கை இன்னும் மோசமாக இருக்கும், அமெரிக்கா உதவினால் அவர்களுடைய படைத் தளங்கள் குறிவைக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை.

இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாக ஈரான் ஆயுதப் படைகளின் தளபதி சர்தார் பகேரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 1-ல் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, அதேசமயம் இதை மறுக்கவும் இல்லை. இந்த நிலையில் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகளைக் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.

இவை ஈரான், ஏமன் மற்றும் ஈராக்கிலிருந்து ஏவப்பட்டதாகவும், 99 சதவிகிதம் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல், ஈரான் இடையிலான இந்தச் சண்டை போர் சூழல் உருவாவதற்கானப் பதற்றத்தை அதிகரித்தது.

தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில், இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு ஆயுதப் படைகளின் தளபதி சர்தார் பகேரி கூறியதாவது:

"தூதரகத்தில் இஸ்ரேலின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இதற்குப் பதிலடி தர வேண்டியிருந்தது. இஸ்ரேல் மீதான நடவடிக்கை நிறைவடைந்துவிட்டது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால், எங்களுடையப் பதிலடி இன்றைய இரவு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கும். இஸ்ரேலின் பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவினால், அவர்களுடைய படைத் தளங்கள் குறிவைக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in