
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் மற்றும் பிற நகரங்கள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், ஈரான் மீது இரு முறை இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரிட்ட இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை முற்றிலும் நீக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக விளக்க அறிக்கை வெளியிட்டது.
இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழி தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் அணுசக்தி செறிவூட்டல் திட்ட நிலையமும் தாக்கி அழிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜுன் 14) அதிகாலை மத்திய தரைகடலை ஒட்டியுள்ள இஸ்ரேலிய நகரமான டெல் அவிவ் மீது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு `ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி மத்திய ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் ராணுவத் தலைமையகத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டெல் அவிவை தொடர்ந்து, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் மற்றும் பிற பகுதிகளில் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 34 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் தொடர்பாக ஈரான் ராணுவத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில்,
`ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பகுதிகளில் மீது சியோனிச பயங்கரவாத ஆட்சியாளர்களால் நேற்று காலை நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் மூத்த ராணுவத் தளபதிகள், முக்கிய விஞ்ஞானிகள், அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஒரு வலிமையான மற்றும் துல்லியமான பதிலடியை அளிக்கத் தொடங்கியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது மூன்றாவது சுற்று வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் இன்று நடத்தியுள்ளது.