ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்

எப்ரஹிம் ரெய்ஸியின் மறைவைத் தொடர்ந்து, 2025-ல் நடைபெறவிருந்த 14-வது அதிபர் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுகிறது.
ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்

14-வது அதிபர் தேர்தல் ஜூன் 28-ல் நடைபெறவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் அதிபர் எப்ரஹிம் ரெய்ஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 2025-ல் நடைபெறவிருந்த அதிபர் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுகிறது.

ஈரான் நாட்டு நீதித் துறை, அரசு மற்றும் நாடாளுமன்றம் ஆகிய பிரிவுகள் சார்பில் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஜூன் 28-ல் தேர்தல் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. மே 30 முதல் ஜூன் 3 வரை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பதிவு செய்துகொள்ளலாம். தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஜூன் 12 முதல் ஜூன் 27 வரை பிரசாரம் மேற்கொள்ளலாம்.

ஈரானின் இடைக்கால அதிபராக முதல் துணை அதிபர் முஹமது மொக்பேர் பொறுப்பேற்றுள்ளார்.

ஈரான் அரசியலமைப்பின்படி, அதிபரால் தனது கடமையைச் செய்ய முடியாதபட்சத்தில் முதல் துணை அதிபர், அதிபராகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். பொறுப்பேற்றுக்கொண்ட 50 நாள்களில் புதிய அதிபருக்கானத் தேர்தலை நடத்த வேண்டும்.

ஈரான் அதிபர் எப்ரஹிம் ரெய்ஸி, அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் உள்பட மொத்தம் 9 பேர் பயணித்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. ஈரான் - அஜர்பைஜான் எல்லைப் பகுதிக்குச் சென்றுவிட்டு தப்ரிஸ் நகருக்குத் திரும்பும் வழியில் மோசமான வானிலை காரணமாக மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in