இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி: ஈரான் தகவல் | Iran | India | MEA |

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி தடையின்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி: ஈரான் தகவல்
இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி: ஈரான் தகவல்
1 min read

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்க ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்காவின் படைகள் கடந்த பிப்ரவரி 28 அன்று திடீரெனக் கூட்டுத் தாக்குதல் நடத்தின. அதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கோபமடைந்த ஈரான் பதில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இஸ்ரேல் மீது மட்டுமன்றி மத்திய கிழக்கு நாடுகள் மீதும் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் கத்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தனது முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகளைக் கத்தார் மூடியுள்ளது. இதனால் எரிசக்தி உற்பத்தி தடைபட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்

மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மற்ற உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ள ஈரானின் புரட்சிகர காவல்படை, அதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேலுக்குத் தொடர்புடைய கப்பல்கள் செல்லத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் தட்டுப்பாடு

இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, கள்ளச் சந்தையில் விற்பனை போன்ற பிரச்னைகளும் எழுந்துள்ளன. வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை மத்திய அரசு நிறுத்தியதன் எதிரொலியாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பல உணவகங்கள் தங்கள் உணவுப் பட்டியல்களை மாற்றியுள்ளன.

வெளியுறவுத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை

இதற்கிடையில் ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை மட்டும் அனுமதிப்பது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி இது தொடர்பாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரான்ஸின் அமைச்சர் ஜீன் நோல் பாரோட் ஆகியோருடனும் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி, கப்பல் போக்குவரத்தை சீராக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி தடையின்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Iran to allow Indian-flagged ship to pass safely through the Strait of Hormuz

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in