
ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியின் முக்கிய பகுதியாக உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மூடும் நடவடிக்கைக்கு ஈரானின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவை ஈரானின் உச்சகட்ட பாதுகாப்பு அமைப்பான, தேசிய பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் மேஜர் ஜெனரல் கௌசாரி தகவல் தெரிவித்துள்ளார்.
முடிவில் உறுதியாக இருந்து, தினசரி உலகளாவிய எண்ணெய் நுகர்வில் 20% அளவுக்குக் கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால், கச்சா எண்ணெயின் விலை பலமடங்கு அதிகரித்து, அதன் மூலம் உலகப் பொருளாதாரம் சீர்குலையும் என்று கூறப்படுகிறது.
அத்துடன், கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் போர், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல், சிரியா ஆட்சி கவிழ்ப்பு போன்ற விவகாரங்களால் ஸ்திரமின்மை நிலவும் மத்திய கிழக்கு பகுதியில், ஈரானின் இத்தகைய நடவடிக்கையால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.
ஹோர்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம்
பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் 167 கி.மீ. நீளமுடைய (கடல் வழிப்பாதையான) ஹோர்முஸ் ஜலசந்திக்கு வடக்கே ஈரானும், தெற்கே ஓமனும், ஐக்கிய அரபு அமீரகமும் அமைந்துள்ளன. இந்த ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்காக 3 கி.மீ. அகலமுடைய பாதை பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளுக்கு சராசரியாக 17 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய், அதாவது உலகளாவிய எண்ணெய் தேவையில் சுமார் 20 முதல் 30 சதவீதம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டுசெல்லப்படுகிறது. குறிப்பாக சௌதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபடுகின்றன.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மூடப்பட்டால், கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு பிராந்திய அளவிலும் பதற்றங்கள் அதிகரித்து, மோதலுக்கு அது வழிவகை செய்யும்.
ஹோர்முஸ் மூடப்பட்டால் இந்தியாவிற்காக பாதகங்கள் என்னென்ன?
ரஷ்யா மற்றும் சில அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்டு வந்தாலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் பகுதி ஈரானிடமிருந்தே பெறப்படுகிறது.
ஒரு வேளை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படும் பட்சத்தில், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் அதிகரிப்புக்கு அது வழிவகுக்கும். மேலும், அத்தகைய நடவடிக்கை அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூட அதிகாரம் உள்ளதா?
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி, அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தை நிறுத்த ஈரானுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் என்று எதுவும் கிடையாது. பலவந்தமான முறையில், படை பலத்தை வைத்து மட்டுமே ஈரானால் ஜலசந்தியை மூட முடியும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் கடற்படை ஹோர்முஸ் ஜலசந்தியை வலுக்கட்டாயமாக மூடி கப்பல் போக்குவரத்தை நிறுத்த முயற்சித்தால், அப்பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் போர்க்கப்பல்கள் அதற்கான தகுந்த பதிலடியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.