இஸ்ரேலைக் குறிவைத்து நேற்று (அக்.1) இரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இந்த தாக்குதலில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தங்களை நோக்கி ஏவப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது இஸ்ரேல்.
கடந்த ஒரு வருடமாக மத்திய தரைகடலை ஒட்டியுள்ள பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும், தீவிரவாத அமைப்பான ஹமாஸுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், இஸ்ரேலின் வடக்கு எல்லையை ஒட்டியுள்ள லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ஏவுகணை தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல், கடந்த செப்.30-ல் ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலையும் தொடங்கியது. இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள முக்கிய இடங்களைக் குறிவைத்து நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது ஈரான்.
இதனை அடுத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோரின் மரணத்துக்குத் தக்க பதிலடி தரும் விதமாக இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக அறிவித்தது ஈரான்.
ஈரானின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹூ, `ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்’ என்றார். மேலும் தங்களை நோக்கி ஈரான் தொடுத்த ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது இஸ்ரேல்.
இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. மேலும் இந்தத் தாக்குதலை முன்வைத்து ஐநா பாதுகாப்பு சபை இன்று காலை அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது.