

ஹார்முஸ் நீரிணை வழியாக நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பதலடியாக ஈரான் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஆலைகள் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தப்படுவதால் எண்ணெய், எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடல்
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மற்ற உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ள ஈரானின் புரட்சிகர காவல்படை, அதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேலுக்குத் தொடர்புடைய கப்பல்கள் செல்லத் தடை விதித்துள்ளது.
அனுமதி பெற்ற இந்தியா
இதற்கிடையில் ஈரானுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இந்தியா, ராஜதந்திர ஆலோசனைகளை மேற்கொண்டு இந்திய கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் அனுமதியைக் கடந்த மார்ச் 12 அன்று பெற்றது. அதனடிப்படையில் இந்திய கப்பல்கள் தற்போது பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளன.
ஈரானின் நட்பு நாடுகளுக்கு அனுமதி
இந்நிலையில், இந்தியாவுடன் மேலும் 4 நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தி கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி செய்துகொள்ள ஈரான் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-
எதிரி நாடுகளுக்கு அனுமதி இல்லை
‘‘நாங்கள் நட்பு நாடுகளாகக் கருதும் குறிப்பிட்ட சில நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு அனுமதி அளித்துள்ளோம். அதன்படி சீனா, ரஷ்யா, இந்தியா, இராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு போர்ச் சூழலில் இருக்கிறோம். இந்த பகுதி ஒரு போர் மண்டலமாகவே இருக்கிறது. எனவே, எங்கள் எதிரி நாடுகள் மற்றும் அவர்களின் கூட்டாளி நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அதேநேரத்தில், மற்ற நாடுகளுக்கு இந்த நீர்வழிப் பாதை தொடர்ந்து திறந்தே இருக்கும். ஈரானின் எதிரி நாடுகள், இந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது” என்றார்.
Iran has allowed ships from five countries, including India and Pakistan, to pass through the Strait of Hormuz on the basis of being friendly countries.