
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்காக, உள்நாட்டில் உளவு பார்த்த குற்றத்தின்பேரில் மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளதாக அந்நாட்டின் மிஸான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 13 முதல், தொடர்ச்சியாக 12 நாட்கள் கடுமையான முறையில் நிகழ்த்தப்பட்ட மோதலுக்குப் பிறகு, அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கூடிய போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேலும் ஈரானும் நேற்று (ஜூன் 24) ஒப்புக்கொண்டன. இந்நிலையில், ஒரு நாளுக்குப் பிறகு இத்தகைய செய்தி வெளியாகியுள்ளது.
தூக்கிலிடப்பட்ட மூன்று பேரும் இஸ்ரேலின் மொசாட் அமைப்புடன் ஒத்துழைத்தனர் என்றும், பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபரின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களைக் கடத்தினார்கள் என்றும் குறிப்பிட்டு, மேலும் எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் மிஸான் தகவல் தெரிவித்துள்ளது.
இதிரிஸ் அலி, ஆசாத் ஷொஜாய் மற்றும் ரசோல் அஹமத் ரசோல் ஆகிய மூவரும், துருக்கியுடனான சர்வதேச எல்லைக் கோட்டிற்கு அருகே அமைந்துள்ள உர்மியா நகரில் வைத்து இன்று (ஜூன் 25) காலை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
அத்துடன், இஸ்ரேலுடன் இருந்த தொடர்புகளுக்காக சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஈரான் அரசு ஆதரவு பெற்ற நூர்நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மோதலுடன் சேர்த்து இஸ்ரேலுடனான பல தசாப்த கால மோதலில் சிக்கியுள்ள ஈரான், மொசாட்டுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், உள்நாட்டில் இஸ்ரேலிய உளவு அமைப்பின் நடவடிக்கைகளை எளிதாக்கியதாகவும் கூறி, பல நபர்களை முன்னதாக தூக்கிலிட்டுள்ளது.