
இஸ்ரேல்-ஈரான் மோதல் இன்று (ஜூன் 20) எட்டாவது நாளை எட்டிய நிலையில், இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உபயோகித்து சரமாரியாக தாக்கிக்கொண்டன. கடந்த ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதலைத் தொடங்கியது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய மோதலை அடுத்து, தற்போது கிளஸ்டர் குண்டுகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு வார காலமாக நடந்துவரும் இந்த மோதலில் இதுபோன்ற ஆயுதம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இத்தகைய வான்வழித் தாக்குதல் மூலம் இந்த மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மோதலின் தீவிரத்தன்மையை குறைப்பதற்கான அறிகுறிகளோ அல்லது இராஜதந்திர செயல்பாடுகளோ தென்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தெற்கு இஸ்ரேலில் இருக்கும் சொரோகா மருத்துவமனை தாக்குதலுக்கு ஈரான் தலைமை முழு விலையை கொடுக்க வேண்டியது இருக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (ஜூன் 19) சவால் விடுத்துள்ளார். மேலும், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் திட்டமிட்டதை விட இஸ்ரேல் முன்னேறி உள்ளது என்றும், முந்தைய எதிர்பார்ப்புகளைவிட இது அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மோதல் தொடர்பாக, டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் பலமுறை தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இந்த மோதலில் இஸ்ரேலுக்கு இராணுவ ரீதியான ஆதரவை வழங்குவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்யக்கூடும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.