அமெரிக்கா தாக்குதல்: ஈரான் என்ன சொல்கிறது?

"ஈரான் தனது இறையாண்மை, தேசிய நலன் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக தேவையான..."
அமெரிக்கா தாக்குதல்: ஈரான் என்ன சொல்கிறது?
1 min read

ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் மூர்க்கத்தனமானவை, நெடுங்கால விளைவுகளைக் கொண்டவை என ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் சண்டை நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்கா இதில் நேரடியாகத் தலையிடாமல் இருந்து வந்தது. இந்நிலையில், ஈரானின் மூன்று அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று காலை அறிவித்தார். இஸ்ரேலின் உதவியுடன் இந்தத் தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 1979-க்குப் பிறகு ஈரான் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்கா.

ஈரான் மீதான அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறியதாவது:

"ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் அமெரிக்கா ஈரானின் அமைதிக்கான அணு சக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்மூலம், ஐ.நா. விதிகள், சர்வதேச சட்டம் மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் ஆகியவற்றைக் கடுமையாக மீறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்தவை மூர்க்கத்தனமானவை. இதற்கு நெடுங்கால விளைவுகள் உள்ளன. இது போன்ற அபாயகரமான, சட்டவிரோதமான மற்றும் குற்றச்செயல்களுக்காக, ஐ.நா.வின் ஒவ்வொரு உறுப்பினரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஈரான் தனது இறையாண்மை, தேசிய நலன் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக தேவையான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தும்" என்று சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

ஈரான் அதிகாரிகள் கூறியதாக வெளியாகும் செய்திகளில் அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் ராணுவத் தளங்கள் குறிவைக்கப்படும் என ஈரான் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக அணு சக்தி நிலையங்களிலிருந்து மாசுபாட்டுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என அந்நாட்டு தேசிய அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு மையம் விளக்கமளித்தது. சர்வதேச அணு சக்தி அமைப்பும், ஈரான் அணுசக்தி நிலையங்களில் கதிர்வீச்சின் அளவுகள் அதிகரிக்கவில்லை என்பதை உறுதி செய்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in