
கத்தாரிலுள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் சண்டை நீடித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கக் கூடாது என்பது இஸ்ரேலின் நிலைப்பாடு.
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஈரானில் 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார். இஸ்ரேல் உதவியுடன் இந்தத் தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா நேரடித் தாக்குதலில் ஈடுபட்டதால், பதற்றமான சூழல் அதிகரித்தது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் கண்டனத்தைப் பதிவு செய்தது. எந்நேரமும் அமெரிக்கா மீது ஈரானால் தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரிலுள்ள அமெரிக்க விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
"வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் எத்தனை குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியதோ அதே அளவிலான ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியுள்ளது. கத்தாரில் நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் வசிப்பிடப் பகுதிகளுக்கு வெகு தொலைவிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என்று ஈரான் தரப்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விமானப் படைத் தளம் தோஹாவிலிருந்து தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்துக்கு இந்த விமானப் படைத் தளம் மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து, கத்தார் தனது வான்பரப்பைத் தற்காலிகமாக மூடியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என கத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் தாக்குதலுக்கு கத்தார் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இது கத்தாரின் இறையாண்மைக்கு எதிரானது, சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜெத் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.