
ஈரானில் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபரிடம் பேசியுள்ளார்.
இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் சண்டை நீடித்து வந்த நிலையில், அமெரிக்கா இதில் நேரடியாகத் தலையிடாமல் இருந்தது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. ஈரான் ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. இந்தச் சண்டையில் அமெரிக்கா அதிகாரபூர்வமாக இன்று இணைந்தது.
ஈரானில் ஃபார்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் உதவியுடன் அமெரிக்கா நேரடியாகத் தாக்குதல் நடத்தியது. ஈரான் முன் இருப்பது அமைதி அல்லது பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். இந்தத் தாக்குதலுக்கு ஈரான் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசௌத் பெசெஷ்கியானை அழைத்துப் பேசியுள்ளார். இந்த உரையாடல் 45 நிமிடங்கள் வரை நீடித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பதற்றத்தைத் தணிக்கவும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் பிரதமர் மோடி அழைத்ததற்கும் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கும் ஈரான் அதிபர் நன்றி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அதிபரிடம் பேசியது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ஈரான் அதிபர் மசௌத் பெசெஷ்கியானிடம் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாகப் பேசினோம். அங்கு அதிகரித்துள்ள சண்டைகள் குறித்த கவலையை வெளிப்படுத்தினோம். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க உடனடியாகப் பதற்றத்தைத் தணிக்கவும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் இருவரும் வலியுறுத்தினோம்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.