கனடா பிரதமர் பதவியைக் குறிவைக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா!

சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தார் தல்லா.
கனடா பிரதமர் பதவியைக் குறிவைக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா!
1 min read

கனடா பிரதமர் பதவியை ஜஸ்டன் ட்ரூடோ ராஜினாமா செய்யவிருப்பதை அடுத்து, அப்பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜன.6-ல் அறிவித்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது கனடா லிபரல் கட்சி. இந்நிலையில் பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்கியுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா.

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் 1974-ல் பிறந்தார் ரூபி தல்லா. இவரது பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர்கள். 1984-ல் காலிஸ்தான் தீவிரவாதிகள் பிடியில் இருந்த பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோவிலை மீட்கும் வகையில் ஆபரேஷன் ப்ளூஸ்டார் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு 1984-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தார் தல்லா.

10 வயதே ஆன தல்லா எழுதிய கடிதத்தை செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்ட இந்திரா காந்தி, இந்தியா வருமாறு தல்லாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அதன்பிறகு அதே ஆண்டில் மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா காந்தி.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு, வின்னிபெக் பல்கலைக்கலைக் கழகத்தில் உயர் கல்விப் படிப்பை நிறைவு செய்தார் தல்லா. இதனை அடுத்து 1993-ல் மிஸ் இந்தியா கனடா போட்டியில் பங்கேற்று அவர் 2-வது இடம் பிடித்தார்.

லிபரல் கட்சியில் இணைந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கிய தல்லா, 2004 முதல் 2011 வரை எம்.பி.யாக செயல்பட்டார். குறிப்பாக, தொடர்ச்சியாக மூன்று முறை எம்.பி.யாகத் தேர்வான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் என்கிற சாதனையை அவர் படைத்தார்.

இந்நிலையில், தற்போது கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இணைந்துள்ளார் தல்லா. கனடா பிரதமர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டால், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவித்து கவனம் பெற்றுள்ளார் தல்லா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in