

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் போர்ச்சூழல் எழுந்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் உடனே அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு 15 நாட்கள் வரை கெடு விதித்துள்ளார். இந்த காலக்கெடுவிற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை
மேலும் ஈரானில் அரசுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தெஹ்ரானில் உள்ள ஷெரீப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், வன்முறை வெடித்தது. இதையடுத்து ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய தூதரகத்தின் அறிவுரை
முன்னதாக ஜனவரி மாதமே, ஈரானுக்குத் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து தற்போது அவசர அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடனே வெளியேற அறிவுரை
"கடந்த ஜனவரி 5 அன்று இந்திய அரசு வெளியிட்ட பயண ஆலோசனையின் தொடர்ச்சியாக, ஈரானில் நிலவி வரும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு இருக்கும் மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் வணிக ரீதியான விமானங்கள் உள்ளிட்ட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும்
கடந்த ஜனவரி 14 அன்று வெளியிடப்பட்ட பயண ஆலோசனை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது; அதன்படி, இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். போராட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் உள்ளூர் ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஈரானில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் கடவுச்சீட்டு, அடையாள அட்டைகள், உள்ளிட்ட தங்களின் பயண மற்றும் குடியேற்ற ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படின் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்.
இணையதளத்தில் பதிவு செய்க
ஈரானில் இருந்துகொண்டு இதுவரை இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யாத இந்தியக் குடிமக்கள் அனைவரும், https://www.meaers.com/request/home என்ற இணைய இணைப்பில் தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த இணைப்பு தூதரகத்தின் இணையதளத்திலும் உள்ளது. ஈரானில் இணையச் சேவை முடக்கம் காரணமாக யாரேனும் பதிவு செய்ய முடியாவிட்டால் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அத்தகவலைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Embassy issues advisory urging nationals to leave Iran amid nationwide anti-govt protests