போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா உக்ரைன் இடையே இந்தியா மத்தியஸ்தத்தில் ஈடுபடாது
வரும் ஆகஸ்ட் 23-ல் உக்ரைனுக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி செல்லும் நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே சமாதானத்தைக் கொண்டுவர இந்தியா நேரடியாக மத்தியஸ்தம் மேற்கொள்ளாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக வரும் ஆகஸ்ட் 23-ல் உக்ரைனுக்கு செல்ல இருக்கிறார் பிரதமர் மோடி. இதை அடுத்து போரில் ஈடுபட்டு வரும் இரு நாடுகளுக்கு இடையே நேரடியாக மத்தியஸ்தம் மேற்கொள்ளும் பணியில் இந்திய ஈடுபடாது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே உரிய தகவல்களை இந்தியா கடத்தும் பணியில் ஈடுபடும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு இதுவரை இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் எந்த ஒரு கருத்தையும் இந்திய அரசு தெரிவிக்கவில்லை. ஆனால் பேச்சு வார்த்தை மூலம் இந்த விவகாரத்தில் தகுந்த முடிவைக் கொண்டுவர முடியும் எனவும், அதற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியாவின் ஆதரவு இருக்கும் எனவும் தொடர்ந்து பொது வெளியில் இந்திய அரசு கருத்து தெரிவித்து வருகிறது.
கடந்த மாதம் 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்குச் சென்று அதிபர் புதினை சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. அதற்கு முன்பு ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக இத்தாலி சென்ற பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.
போர் தொடங்கிய பிறகு உக்ரைனில் உள்ள ஸபோரிஸியா அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், கருங்கடல் தானிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையிலும் இந்தியா முக்கியப் பங்காற்றியது என்று கடந்த பிப்ரவரியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியளித்தார்.