உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அப்போது, `இந்தியா என்றுமே நடுநிலை வகித்ததில்லை. நாங்கள் எப்போதுமே அமைதியின் பக்கமே இருந்துள்ளோம்’ என்று கருத்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
`அமைதிக்கான முயற்சியில் இந்தியா முழுமையாக ஈடுபட்டுள்ளது என்பது பிற நாடுகளில் உள்ள மக்களுக்கும் தெரியும். இது போருக்கான காலமல்ல என முன்பு அதிபர் புதினை சந்தித்தபோது நான் தெரிவித்தேன். இந்தியா என்றுமே நடுநிலை வகித்ததில்லை, இந்தியா எப்போதுமே அமைதியின் பக்கம் இருந்துள்ளது. பிரச்னைக்கான தீர்வு எப்போதுமே போர்க்களத்தில் கிடைப்பதில்லை.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் வழியாக மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். நேரத்தை வீணடிக்காமல் நாம் அதை நோக்கிச் செல்ல வேண்டும். அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியிலும் இந்தியா முழுமையாக ஈடுபட தயாராக உள்ளது. ஒரு நண்பராக நான் உங்களிடம் உறுதியளிக்கிறேன்’ என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் பேசினார் பிரதமர் மோடி.
இந்த சந்திப்பில் மோடியும், ஜெலென்ஸ்கியும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் கலாச்சாரப் பரிமாற்றம், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல், மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்தச் சந்திப்பின்போது, உக்ரைன் அதிபரிடம் 4 நடமாடும் மருத்துவமனைகளை ஒப்படைத்தார் பிரதமர் மோடி. மேலும், இந்தியா வருமாறு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தாக, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் தலைநகர் கீவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
`1992-க்குப் பிறகு முதல் முறையாக இந்தியப் பிரதமர் உக்ரைனில் இருக்கிறார். இதைப் போன்ற நிகழ்வில் அழைப்பு விடுப்பது இயற்கையாக நடப்பதுதான். அவருக்கு ஏற்ற நேரத்தில் அதிபர் ஜெலென்ஸ்கி இந்தியாவுக்கு வருவார். கடந்த காலங்களில் இந்தியா உக்ரைனுக்கு பல மனிதாபிமான உதவிகளைச் செய்துள்ளது’ என்றார் ஜெய்சங்கர்.