
வரும் ஆகஸ்ட் 1 முதல், இந்திய இறக்குமதிகள் மீது 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதையும், நீண்டகாலமாக நிலவும் வர்த்தகத்திற்கான கட்டுப்பாடுகளையும், இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களாக அவர் மேற்கோள் காட்டினார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், இந்தியா ஒரு நட்டு நாடாக கருதப்பட்டாலும், அதிகப்படியான வரிகள் மற்றும் வர்த்தகத்தின் மீதான பல்வேறு தடைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறைவாகவே உள்ளன என்று கருத்தை டிரம்ப் தெரிவித்தார்.
"நினைவில் கொள்ளுங்கள், இந்தியா எங்களது நட்பு நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக, அவர்கள் விதிக்கும் வரிகள் மிக அதிகமாக உள்ளன - உலகிலேயே மிக உயர்ந்தவை - மேலும் அவர்கள் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடுமையான மற்றும் அருவருப்பான வர்த்தகத் தடைகளை கொண்டிருப்பதால், ஒப்பீட்டளவில் நாங்கள் அவர்களுடன் சிறிய அளவிலான வியாபாரத்தையே மேற்கொண்டோம்’ என்று ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் எழுதியுள்ளார்.
ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகளை தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப், ` ரஷ்யா உக்ரைனில் மேற்கொள்ளும் படுகொலைகளை நிறுத்தவேண்டும் என்று உலகம் விரும்பும் நேரத்தில், அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடமிருந்து வாங்கி வருகின்றனர், மேலும் சீனாவுடன் இணைந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாடிக்கையாளர்களாக உள்ளனர் - எல்லாம் நல்லதல்ல!
எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரியையும், அத்துடன் மேற்கூறியவற்றுக்கான அபராதத்தையும் செலுத்தும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி’ என்றார்.
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்றும், 25% வரை அதிக வரிகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறிய ஒரு நாள் கழித்து இத்தகைய அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ளார்.