
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹிந்து கோயிலுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செய்த அவமதிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய அரசு.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சினோ ஹில்ஸ் பகுதியில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் உள்ளது. இந்த கோயில் சுவரில், `ஹிந்துக்களே திரும்பச் செல்லுங்கள்’ என்று ஸ்பேரயரை உபயோகித்து எழுதப்பட்டிருந்தது. கலிஃபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் உள்ள ஹிந்துக் கோயிலில் கடந்தாண்டு இதேபோல எழுதப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், இது அமெரிக்க அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோயில்களுக்கு அவமதிப்பு ஏற்படுவது இது முதல்முறை அல்ல என்றும், கடந்த 2022-ல் தொடங்கி இதுவரை கலிஃபோர்னியா மற்றும் நியூயார்க்கில் உள்ள 10 ஹிந்து கோயில்கள் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, அந்த கோயில்களின் பட்டியலை வட அமெரிக்க ஹிந்துக்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், வழிபாட்டுத் தலங்களுக்கான உரிய பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் உள்ளூர் சட்ட ஒழுங்கு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம். இந்த இழிவான செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம். வெறுப்பு வேரூன்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். நமது மனிதநேயமும் நம்பிக்கையும், அமைதியும் இரக்கமும் நிலவுவதை உறுதிசெய்யும்’ என்றார்.