
புதிய விஷயங்களைப் பரிசோதிக்க இந்தியா ஒரு வகையான சோதனைக் கூடம் என சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறிய கருத்துக்குப் பலரும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
லிங்க்ட்இன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரெய்ட் ஹோஃப்மேனுடன் சமீபத்தில் நடைபெற்ற ஒரு உரையாடலில் பில்கேட்ஸ் பேசியவை பின்வருமாறு,
`சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்றவை மிகவும் கடினமாக இருக்கும் நாடுகளுக்கு இந்தியா ஓர் உதாரணம். தற்போது போதுமான அளவுக்கு அவர்கள் நிலையாக உள்ளனர், அத்துடன் அரசாங்க வருமானமும் உயர்ந்துள்ளது. அடுத்த 20 வருடங்களில் வியக்கும் வகையில் அம்மக்களின் வாழ்வாதாரம் உயரும்.
புதிய விஷயங்களை பரிசோதிக்க இந்தியா ஒரு வகையான சோதனைக் கூடம். சோதனை முயற்சிகள் இந்தியாவில் வெற்றியடைந்தால், அவற்றைப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்’ என்றார்.
பில்கேட்ஸின் இந்த கருத்துக்குப் பொதுவெளியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக பில்கேட்ஸுக்குச் சொந்தமான கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய நிதி உதவியை உபயோகித்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி பரிசோதனை முயற்சியில் ஏற்பட்ட உயிர்பலி சம்பவத்தை முன்வைத்துப் பலரும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
2009-ல் பாத் (PATH) என்ற தடுப்பூசி தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதி உதவி வழங்கியது. இதைத் தொடர்ந்து பாத் நிறுவனம் தயாரித்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்துடன் (ICMR) இணைந்து தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள 14 ஆயிரம் பழங்குடியின பள்ளி மாணவிகளுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் பங்கேற்ற பலருக்கும் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டன. மேலும் அந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 7 நபர்கள் உயிரிழந்தனர். ஆனால் தொற்று, தற்கொலை போன்ற காரணங்களால் அந்த 7 நபர்களும் உயிரிழந்ததாக பாத் நிறுவனம் விளக்கமளித்தது.
போதிய விழிப்புணர்வு இல்லாத பழங்குடிகளுக்கு மத்தியில் வேண்டுமென்றே தடுப்பூசியை செலுத்து சோதனை நடத்தியதாக அப்போது பலரும் குற்றம்சாட்டினர். இந்நிலையில் இந்த விவகாரத்தை நினைவு கூறி, பில்கேட்ஸ் சமீபத்தில் கூறிய கருத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.