உக்ரைன் உடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கான மத்தியஸ்தத்தில் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ஈடுபடலாம் என்றும் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் பேசியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் தொலைதூரக் கிழக்குப் பகுதியில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் விளாடிவோஸ்டோக் நகரத்தில் ஒவ்வொரு வருடமும் கிழக்குப் பொருளாதார மன்றம் நடைபெறும். நடப்பாண்டுக்கான பொருளாதார மன்றம் செப்.03-ல் தொடங்கி விளாடிவோஸ்டோக் நகரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மன்றத்தின் அமர்வில் உக்ரைன் உடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாராக இருப்பதாகப் பேசியுள்ளார் புதின். மேலும், `போர் தொடங்கிய முதல் வாரத்தில் இஸ்தான்புல் நகரத்தில் போர் நிறுத்தம் குறித்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று பிறகு கைவிடப்பட்டது, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அப்போது பேசியவை உபயோகமாக இருக்கும்’ என்றார் புதின்.
`இந்தப் பிரச்னையைச் சுற்றியுள்ள அனைத்துவித சிக்கல்களையும் முடிவுக்குக் கொண்டுவர நினைக்கும் எங்களது முக்கிய நண்பர்களும், கூட்டாளிகளுமான சீனா, பிரேசில், இந்தியா ஆகியோரை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்த விவகாரம் குறித்து இவர்களுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம்’ என்று அமர்வில் புதின் பேசியதாக பிரபல ரஷ்ய செய்தித்தாளான இஸ்வெஸ்டியா செய்தி வெளியிட்டுள்ளது.
`இந்தியப் பிரதமர் மோடி, அதிபர் புதினுக்கு இடையே ஆக்கப்பூர்வமான நட்பு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட நபர்களிடம் இருந்த முதல் தர தகவலை இந்தியப் பிரதமரால் பெற்றுத்தர முடியும். அவர் புதின், ஜெலென்ஸ்கி, அமெரிக்கர்கள் ஆகியோருடன் நல்ல தொடர்பில் உள்ளார்’ என்று இஸ்வெஸ்டியா செய்தித்தாளுக்குப் பேட்டியளித்துள்ளார் ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்.