
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதாகக் கூறப்படுவதாக இன்று (ஆக. 2) கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த தகவல் மட்டும் உறுதிப்படுத்தப்பட்டால் இது ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதேநேரம், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கி வருகின்றன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், `இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன், அது சரியா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’ என்றார்.
`இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய விநியோகஸ்தர்களிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை பெறுகின்றனர். கச்சா எண்ணெயின் விலை, தரம், சரக்குகள், தளவாடங்கள் மற்றும் பிற பொருளாதாரக் காரணிகள் ஆகியவற்றை முன்வைத்து மட்டுமே கொள்முதல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன’ என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியதாக ஏ.என்.ஐ. வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்கியதற்காக இந்திய இறக்குமதிகள் மீது அபராதம் விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து சில நாள்களுக்குள்ளாகவே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அபராதங்களுடன் 25% கூடுதல் இறக்குமதி வரியை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது.
முன்னதாக, உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள் அமலில் இருந்தபோதிலும், தள்ளுபடி செய்யப்பட்ட விலைக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்வதாக அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ விமர்சித்தனர்.