ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் கோழைத்தனமானது: இந்தியா கண்டனம் | Pakistan | Afghanistan |

பாகிஸ்தானின் பொறுப்பற்ற நடத்தையையும் உள்நாட்டுத் தோல்விகளையும் வன்முறை மூலம் திசைதிருப்பும் முயற்சி...
India calls Pakistan airstrike in Kabul "cowardly, unconscionable", demands accountability over civilian deaths
ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் கோழைத்தனமானது: இந்தியா கண்டனம்
1 min read

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் கோழைத்தனமான காட்டுமிராண்டிச் செயல் என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் கடந்த பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், சமீப காலங்களில் அது எல்லை தாண்டும் பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபன் அரசு, பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

காபூல் மீது பாகிஸ்தான் தாக்குதல்

இதற்கிடையில் நேற்று (மார்ச் 16) நள்ளிரவில் திடீரென்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியது. காபூலில் உள்ள போதை மறுவாழ்வு சிகிச்சை மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தாலிபன் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா கண்டனம்

இந்நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“காபூலில் உள்ள போதைப்பொருள் சிகிச்சை மருத்துவமனை மீது மார்ச் 16 இரவு பாகிஸ்தான் நடத்திய கொடூரமான விமானத் தாக்குதலை இந்தியா உறுதியாகக் கண்டிக்கிறது. இது ஒரு கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறைச் செயல். இந்தத் தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு மருத்துவமனை எந்த வகையிலும் ராணுவ இலக்காகக் கருத முடியாது.

ராணுவ நடவடிக்கையா? படுகொலையா?

பாகிஸ்தான் இப்போது ஒரு படுகொலையை ராணுவ நடவடிக்கையாக மாற்றி மறைக்க முயல்கிறது. இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீதான தாக்குதலாகவும், பிராந்திய அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் நேரடி அச்சுறுத்தலாகவும் உள்ளது. பாகிஸ்தானின் பொறுப்பற்ற நடத்தையையும் உள்நாட்டுத் தோல்விகளையும் வன்முறை மூலம் திசைதிருப்பும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது. ரமலான் புனித மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சமூகங்களுக்கு அமைதி, சிந்தனை மற்றும் கருணைக்கான காலகட்டத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இதை மேலும் கண்டிக்கத்தக்கதாக ஆக்குகிறது.

தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை வேண்டுமென்றே குறிவைப்பதை மதமும், எந்தச் சட்டமும், எந்த நெறிமுறையும் நியாயப்படுத்த முடியாது. இந்தக் குற்றச் செயலுக்குக் காரணமானவர்களை சர்வதேச சமூகம் பொறுப்பேற்றுக்கொள்ள வைக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் நடத்தும் கொடூரமான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தத் துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் மக்களுடன் இந்தியா உறுதியான ஒற்றுமையைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் ஆதரிப்பதில் இந்தியா அசைக்க முடியாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

India calls Pakistan airstrike in Kabul "cowardly, unconscionable", demands accountability over civilian deaths

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in